மல்லூர் அருகே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் ரெயில் மறியல்
போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.;
சேலம் மாநகரில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி மல்லூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வேங்காம்பட்டி பகுதியில் சேலம்-கரூர் ரெயில் செல்லும் தண்டவாளம் உள்ளது. ரெயில்கள் செல்வதற்காக ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே வேங்காம்பட்டியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக சுரங்கப்பாதை அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகத்தினால் டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று சுரங்கப்பாதை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மல்லூர் ரெயில் நிலையம் அருகே மறியலில் ஈடுபட முயன்றனர். மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் அய்யனார் தலைமையில் தாங்கினார். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரெயில்களை மறிக்க முயன்றனர். இதுகுறித்து ஏற்கனவே தகவல் அறிந்த மல்லூர் போலீசார், ரெயில்வே போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இந்தநிலையில் அவர்கள் தண்டவாள பகுதிக்குள் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் நிலையம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார், தாசில்தார் பார்த்தசாரதி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வருவாய் துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணி இன்னும் ஒரு வார காலத்திற்குள் தொடங்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ெரயில்வே சுரங்கப்பாதை பணியை தொடங்ககோரி பொதுமக்கள் ெரயில் மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.