ஓமலூர் அருகே ரெயில்வே மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
மூட்டைகள் விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் படுகாயம்;
சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து பருத்திக்கொட்டை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓமலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஓமலூர் ரெயில்வே மேம்பாலம் வந்தபோது முன்னால் சென்ற லாரியை பருத்திக்கொட்டை ஏற்றி சென்ற லாரி முந்த முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பருத்திக்கொட்டை மூட்டைகள் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தன. இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழே மோட்டார் சைக்கிளில் சென்ற பவளத்தானூர் பகுதியை சேர்ந்த சபரிபாலன் (வயது 30) என்பவர் மீது பருத்திக்கொட்டை மூட்டைகள் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் லாரி மேம்பாலத்தின் தடுப்புசுவர் மீது கவிழ்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பருத்திக்கொட்டை மூட்டைகளின் அடியில் சிக்கிய வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர் செய்தனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.