நாமக்கல்: ஜனவரி 10 அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் ஜரூர்...!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் சொர்க்கவாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை செய்வார்கள்.
நாமக்கல் அரங்கநாதர் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஆகும்.மலையை குடைந்து கட்டப்பட்ட இக்கோயில் புராதன சிறப்புமிக்கது.நாமக்கல்லில் மட்டும் தான் பெருமாள் நின்ற நிலை, நரசிம்ம மூர்த்தியாக அமர்ந்த நிலை, அரங்கநாதராக சயன நிலை என மூன்று நிலைகளில் காட்சியளிக்கிறார். பூலோகத்தில் பிரம்மனுக்கு எங்கும் கோயில்கள் இல்லாத நிலையில் நாமக்கல்லில் நரசிம்மசுவாமி கருவறையில் பிரம்ம தேவரின் உருவம் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அரங்கநாதரின் காலடியில் மகாலட்சுமி தாயார் அமர்ந்து வணங்கும் நிலையில் உள்ளார். இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனக்கோலத்தில் அரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் திருப்பாவை திருவெம்பாவை பாடப்பட்ட விளக்கு பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படுகின்றன. திருவரங்கத்தை போலவே நாமக்கல் அரங்கநாதர் கோவிலிலும் பரமபதம் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் அந்த வகையில், அருள்மிகு அரங்காநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதயை முன்னிட்டு வருகிற ஜனவரி 10ம் தேதி, வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி நாளில் இக்கோயிலில் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்படும்.இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் சொர்கவாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை செய்வார்கள். பின்னர் ஆகம விதிகளின்படி சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக சாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.பின்னர் அதிகாலை முதல் இரவு வரை, பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமியை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் வழியாக உற்சவர் வராமல் சுவாமியின் ஜடாரி கொண்டுவருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ய, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். எனவே பக்தர்கள் சிரமம் இல்லாமல் கோயிலுக்கு வரிசையாக வந்து, சுவாமியை வழிபட்டு செல்வதற்கு ஏதுவாக தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பக்தர்கள் எளிதாக கோயிலுக்கு சென்று வர தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.ஜனவரி 10ம் தேதி அதிகாலை முதல், நாமக்கல் மெயின்ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படும். திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வ சீராளன், ரமேஷ்பாபு, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.