தமிழக பகுதிகளில் 104 நாட்கள் நீடித்த வடகிழக்கு பருவமழை விலகியது

தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை நேற்று விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2025-01-28 16:53 GMT
தமிழக பகுதிகளில் 104 நாட்கள் நீடித்த வடகிழக்கு பருவமழை விலகியது
  • whatsapp icon
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த முறை 2024 அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடைசி நேரத்தில் கரையை கடப்பதற்கு முன்பு ஃபெஞ்சல் புயல் உருவானது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகம் வழியாக ஆந்திரா வரை சென்று, திரும்பி மீண்டும் தமிழகம் நோக்கி வந்தது என பல்வேறு விநோதங்கள் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்தன. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் 59 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 33 சதவீதம் அதிகம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. என அதிகனமழை பதிவானது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக எங்கும் மழை பதிவாகவில்லை. வட இந்திய பகுதிகளில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வளிமண்டல கீழடுக்கில் ஈரப்பதம் இன்றி வறண்ட காற்று வீசுகிறது. இதன் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த முறை மொத்தம் 104 நாட்கள் வடகிழக்கு பருவமழை நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பருவமழை விலகியபோதும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 30-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் 2-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜனவரி 30, 31-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், பிப்ரவரி 1-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

Similar News