இதய நோய் பாதிக்கப்பட்ட 13 குழந்தைகள் சிகிச்சைக்காக
சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.;
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 22-ந் தேதி இதய நோய் சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 132 குழந்தைகளை டாக்டர்கள், மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில், 13 குழந்தைகளுக்கு இதய பாதிப்பு இருப்பதும், 119 குழந்தைகளுக்கு லேசான இதய பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இதய பாதிப்பு உள்ள 13 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் குழுவினர் பரிந்துரை செய்தனர். மேலும், 119 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தினர். இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட 13 குழந்தைகள் நேற்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வேன் மூலம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை இணைந்து 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதய சிகிச்சை அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் ஆண்டுக்கு 2 முறை அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் பரிசோதனை செய்து குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு உள்ளதா? என கண்டறிவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும், என்றனர்.