சேலம் கருப்பூரில் ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

Update: 2024-08-03 03:24 GMT
ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் கருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தாதேவி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்டத்தில் ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே 18 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த பல்நோக்கு விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் ஓடுகளம், கைப்பந்து, ஸ்கேட்டிங், டென்னீஸ், கோ கோ, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, ஆக்கி மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடம், நீச்சல்குளம், நிர்வாக அலுவலகம், விளையாட்டு விடுதி, உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக விளையாட்டு அரங்கில் என்னென்ன விளையாட்டு மைதானம், எங்கெங்கு அமைய உள்ளன. என்ற விவரங்களை விளையாட்டு அரங்க வரைபடம் மூலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு, விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர்கள் பொன்மணி, ஆக்ரிதி சேத்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News