சேலம் அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு
போலீசார் விசாரணை;
சேலம் அருகே உள்ள சீரகாப்பாடி மதுரையன் காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி பூமலர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒரு மகள் கோவையில் சர்வேயராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். முருகேசன் திண்டிவனத்தில் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமையன்று சேலத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்துவிட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் புறப்பட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை பூமலர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் அதில் இருந்த 30 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பரவாசுதேவன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் தங்க நகையை தவிர வேறு ஏதாவது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு இந்த கொள்ளையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.