சூழல் பூங்கா இன்று முதல் 4 நாள் மூடல்
பராமரிப்பு பணி காரணமாக மன்னவனூர் சூழல் பூங்கா இன்று முதல் 4 நாள் மூடல்;

கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்கா, பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் வரும் 4ம் தேதி வரை மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமானதாகவும், சுற்றுலாப்பயணிகள் விரும்பி பார்வையிடும் இடமாக மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்கா உள்ளது. கொடைக்கானலில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் இந்த சூழல் சுற்றுலா பூங்கா மன்னவனூர் ஏரியுடன் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தி இப்பகுதிக்கு செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் ஜிப் ரோப் என்ற சாகச விளையாட்டும் உள்ளது. மன்னவனூர் ஏரியில் சுற்றுலா பயணிகள் பரிசல் மற்றும் குதிரை சவாரி செய்வதற்கான வசதிகள் உள்ளன. இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வனத்துறை முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனாவின் உத்தரவுப்படி இந்த பூங்கா இன்று (ஏப்.1) முதல் 4ம் தேதி வரை மூடப்படுகிறது. எனவே இந்நாட்களில் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.