மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

இருக்கண்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

Update: 2023-12-11 11:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கள் கிழமையான இன்று சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம், சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.இக்கோவிலில் உள்ள அருள்மிகு மாரியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ,திருமஞ்சன பொடி, விபூதி உள்ளிட்ட 18 வகையான திவ்ய பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதற்கு முன்னர் திருநெல்வேலியை சேர்ந்த ஓதுவார் குழுவினர் தலைமையில் சிறப்பு மகா ஹோம வேள்வி நடைபெற்றது. பல்வேறு மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும், மக்கள் நல்வாழ்விற்காகவும் வேள்வி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அபிஷேகம் முடிந்த பின் சிவலிங்க வடிவில் 1008 சங்கு அலங்கரிக்கப்பட்டு அதற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் புனித தீர்த்தம் நிரம்பிய 1008 சங்குகளை பஞ்சகீர்த்தனை சங்கு மேளம் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்து அம்மனுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அருள்மிகு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் யாக பூஜையிலும் பின்னர் நடைபெற்ற அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அம்மனை வணங்கி வழிபட்டனர். சாமி தரிசனம் செய்ய வந்த பத்திரகோடிகளுக்கு அருள்மிகு மாரியம்மன் அருள் பாலித்தார். இக்கோவிலில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் குலவையிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வந்த பத்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் ,சுண்டல் , புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 1008 சங்காபிஷேகத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி முன்னின்று நடத்தினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News