ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிதியுதவி பள்ளிகளில் காலை உணவு திட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் வளர்மதி பேசுகையில்," முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளான 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது.
உணவுக் கூடம் சீரமைக்கும் பணிகள், கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் அலுவலர்கள் முறையாக பள்ளிகளுக்குச் சென்று காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உணவின் தரத்தினையும், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சமையல் செய்பவர்களின் பணிகளையும் ஆய்வு செய்து மாணவ -மாணவிகளுக்கு தரமான, சுவையான காலை உணவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,"என கூறினார்.