50 சதவீத மானியத்தில் மாம்பழக்கூழ் உற்பத்தி தொழிற்சாலை அமைத்து பயன்பெறலாம்
தோட்டக்கலை துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் தகவல்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாங்கனியின் மதிப்புகூட்டப்பட்ட மாம்பழ தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த மாங்கனி திருவிழா சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மா விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பழக்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மாம்பழங்களை பல்வேறு வகையில் மதிப்பு கூட்டப்பட்டும், தமிழ்நாட்டில் அதிகளவில் உற்பத்தியாகும் தோத்தாபுரி, பெங்களூரா ரக மாம்பழங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக, தமிழ்நாடு மாம்பழத்தினை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தும் வழிமுறைகள் குறித்த கையேட்டை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், கலெக்டர் பிருந்தாதேவி ஆகியோர் வெளியிட்டனர்.