விபத்தில் கூட்டுறவு வங்கி செயலாளர் பலி

அரக்கோணம் அருகே‌ இருசக்கர வாகனம் மோதிக்கொண்டதில் கூட்டுறவு வங்கி செயலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-23 17:09 GMT

பலியானவர்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்த ராஜரத்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 56). மணவூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், இனியன் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். திருவேங்கடம் திருத்தணியில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் திருவாலங்காட்டில் இருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூர் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த திருவேங்கடம், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சதீஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News