ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-28 09:23 GMT

18 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வரும் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, ரங்கநாதபுரம் பகுதியிலுள்ள பாலத்தின் கீழே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அணைப்பாளையம் மாதர் கிளைச் செயலாளர் செல்வி தலைமையில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் நாகராஜன், ரங்கநாதபுரம் கிளைச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

இதில், 18 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டிய பாலத்தை 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் நெடுஞ்சாலைத் துறைக்கு பலமுறை கடிதம் வாயிலாகவும், நேரிலும், அலைபேசியிலும், போராட்டம் நடத்தியும் நினைவூட்டியும் செயல்படாத நிலையில் இன்று மீண்டும் நடக்கும் போராட்டத்தின் வாயிலாக, மக்களைத் திரட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்திட தூண்ட வேண்டாம். விரைந்து பணிகள் முடித்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், மாநகரம் முழுவதும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மக்களைக் கொடும் சிரமத்துக்கு ஆளாக்கி வருகின்றன.

அவற்றை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். ரேசன் கடைகளில் கடந்த ஒரு மாதம் பருப்பும், எண்ணெயும் வழங்கப்படவில்லை. மறுமாதம் சேர்த்து வழங்கப்பட்ட பருப்பு தரமற்றதாக இருந்தது. பாமாயில், அரிசி, கோதுமை, சர்க்கரை போன்று வழங்கப்படும் பொருட்கள் சுத்தமாகவும், தரமாகவும் வழங்கிட வேண்டும்.அதேபோல், நாய்கள் பல்கிப் பெருகி, குழந்தைகள் தெருக்களில் விளையாட முடியாத அச்சத்திற்கு பொதுமக்களைத் தள்ளியுள்ளது. இதற்கு உடனடித் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கின்ற நிலையில் மேற்கண்ட மக்கள் நலக் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நகரக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சின்னச்சாமி, கிளைச் செயலாளர்கள் முத்துக்குமார், விஸ்வநாதன், சிவகுமார், செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News