வறண்ட மேட்டூர் அணை - படகு சென்ற பாதையில் பஸ் பயணம்

மேட்டூர் அணை வறண்டதால் படகு சென்ற பாதையில் அரசு பேருந்து செல்கிறது.

Update: 2024-05-03 03:47 GMT

காவிரியில் அரசு பேருந்து 

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கு குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து சரிந்த நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மள மள வென சரிந்து வருகிறது.

கடல் போல காட்சி அளித்த காவிரி வறண்டு காவிரியின் கரைகள் கட்டாந் தரையாக காட்சியளிக்கிறது. சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து தருமபுரி மாவட்டம் நாகமரை பரிசல் துறைக்கு செல்ல காவிரியை கடந்து செல்ல வேண்டும் இதற்காக விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது.  கடல் போல காட்சியளித்த காவிரி தற்போது வறண்டு நீரோடை போல காணப்படுகிறது.

இதனால் இரு மாவட்ட மக்களும் காவிரியை கடந்து செல்ல பரிசல் துறை வரை அரசு பேருந்து வந்து சென்று கொண்டிருந்தது. தற்போது காவிரி சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வறண்டு போனதால் படகு போக்குவரத்து நடந்து வந்த பகுதியில் தற்போது அரசு நகர பேருந்து சென்று வருகிறது. விசைப்படகும் பரிசலும் சென்று வந்த பாதையில் அரசு பேருந்தும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சென்று வருகிறது.

Tags:    

Similar News