கொங்கணாபுரத்தில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவர்
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவர் கந்தசாமியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எருமைபட்டி கிராமம், கூத்தாடிபாளையம் அருகேயுள்ள பூசாரிகாட்டுவளவு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் கந்தசாமி (78), இவரது மனைவி லட்சுமி(72), தம்பதிகளுக்கு ராஜா,ஜெயக்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு கந்தசாமி வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு குடும்பத்தினருடன் தூங்கச் சென்றுள்ளார். கந்தசாமி மற்றும் மனைவி லட்சுமி ஆகிய இருவரும் ஒரு அறையிலும், அவரது மகன்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் கந்தசாமி தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி லட்சுமியின் தலையில் அம்மிக் கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது மகன்கள் தங்களின் தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவலறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கொலை செய்த கந்தசாமியிடம் கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் நள்ளிரவு நேரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.