கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி

புதிதாக கட்டி வரும் கால்வாய் தரம் குறைவாக இருப்பதாக கூறி புகார்

Update: 2024-02-25 10:53 GMT

தரமற்ற முறையில் கட்டும் கால்வாய்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வட்டம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் உள்ள தெருக்களில் மழைநீர் வடிகால்வாய் இல்லை. இதனால், பெரும் மழைக்காலங்களில், வெள்ள நீர் வீடுகளில் புகுந்து அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து, பொதுமக்களில் நீண்டநாள் கோரிக்கை அடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளில் கடந்த மாதம் தொடங்கியது.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், மழைநீர் கால்வாய் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் கூறியபோது,” வட்டம்பாக்கம் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், வடிகால் முறையாக அமைக்காமல், தரமற்ற முறையில் கட்டுமான பணி நடந்து வருகிறது. சிமென்ட் சாலையின் மீதே ஒருபுறம் கால்வாயை கட்டுகின்றனர்.

இதனால் கால்வாயின் தரம் குறைந்து, விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. மேலும், கால்வாய் ஆங்காங்கே கூறுகளாக உள்ளது. கால்வாய் அமைப்பதற்காக வீடுகளின் முன் நான்கடி ஆழத்திற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்குகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுதால், நோய்தொற்று ஏற்படும் அச்சம் உள்ளது. கால்வாயை கடந்து வீட்டிற்குள் சென்றுவர வயதானோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News