பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி செல்ல நாளை முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு மீண்டும் அனுமதி-வனத்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி உள்ளது, இந்த பேரிஜம் ஏரியானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது, இந்த ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் வனத்துறை அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி இந்த பகுதிக்கு சென்று வருகின்றனர், குறிப்பாக மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பேரிஜம் ஏரி,மதி கெட்டான் சோலை,தொப்பி தூக்கி பாறை, பேரிஜம் ஏரி வியூ உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்து இருந்தனர்.
மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர், இந்நிலையில் பேரிஜம் ஏரி பகுதியில் இருந்து 12 நாட்களுக்கு பின் வேறு அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் குட்டியுடன் இடம்பெயர்ந்ததால் நாளை முதல் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.