கயத்தாறு அருகே விவசாயியை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை
கயத்தாறு அருகே விவசாயி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மேலப்பாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் அண்ணாதுரை (60). விவசாயி. இவரது மகன் அரிகிருஷ்ணன் துபையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அவரது மனைவியிடம் அரிகிருஷ்ணனின் நண்பரான மும்மலைப்பட்டியைச் சேர்ந்த வே. முத்துமாரியப்பன் (41) தகராறில் ஈடுபட்டாராம்.
இதை அண்ணாதுரை கண்டித்து, போலீஸில் புகார் அளித்தார். இதனால், முத்துமாரியப்பன் தனது நண்பர்களான மும்மலைப்பட்டி சு. கருப்பசாமி (54), க. பாலசுப்பிரமணியன் (52) ஆகியோருடன் சேர்ந்து 2019ஆம் ஆண்டு அண்ணாதுரையை வெட்டிக் கொலை செய்தாராம்.
கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, பாலசுப்பிரமணியன் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதி தாண்டவன் விசாரித்து, முத்துமாரியப்பன்,
கருப்பசாமி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த் காபிரியேல் ராஜ் ஆஜரானார்.