நேர கட்டுப்பாட்டை மீறி மதுபான பாரில் மது விற்பனை - ஒருவர் கைது
மதுபான பாரில் அனுமதிக்கப்பட்ட திறக்கும் நேரத்தை விட முன்னதாக திறந்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த நபரை மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் கைது செய்ததுடன், 425 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை அருகே தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது, இந்த விடுதியில் மதுபான பார், மற்றும் பொழுது போக்கிற்காக அட்வென்சர் டூரிசம் உள்ளது, இந்த மதுபான பார் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த விடுதியில் மட்டும் தங்கும் பயணிகளுக்கு மதுபானங்கள் அளவு கோப்பையில் மட்டும் வினியோகம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியில் இயங்கும் மதுபான பார் அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தில் திறக்காமல் அனுமதியை மீறி திறப்பது, மேலும் முன்னதாக அதிகாலை காலை 6 மணி முதல் மதுபான பார் திறக்கப்பட்டு மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது, இந்நிலையில் பழனி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர பாண்டி நேற்று திடீர் என இந்த மதுபான பாரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்,
இந்த சோதனையில் அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து முன்னதாகவே மதுபான கடை திறப்பது தெரிய வந்தது, மேலும் வெளி பகுதியில் இருந்து வரும் பயணிகளுக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது, இதனை தொடர்ந்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பொன்ராஜை கைது செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 425 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்,
மேலும் இது போன்று முன்னதாக மதுபான பாரை திறந்து மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வெளி பகுதியில் இருந்து வரும் மது பிரியர்களுக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தாலோ கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதி ஊழியர்களிடம் எச்சரித்து சென்றார், மேலும் அரசு வழங்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்த மதுபான பார் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோப்புகள் அளித்து அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.