பிரம்மதேசம் அருகே லாரி திருட்டு.
பிரம்மதேசம் அருகே திருடு போன லாரியை போலீசார் 48 மணி நேரத்தில் மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ் அருங்குணம் கிராமத்தில் இயங்கி வரும் என்.எஸ்.கே கிரஷரில் கடந்த 9-ஆம் தேதி இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரி மறுநாள் காலையில் காணாமல் சென்றுள்ளது.
இதுகுறித்து கிரஷரில் பணிபுரியும் மேலாளர் காளியப்பன் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் தலைமை காவலர் கருணாகரன், முதல்நிலை காவலர் சிவசக்தி மைந்தன் உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, அதே கிரஷரில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வரும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (38) என்பவர், இதே கிரஷரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சூப்பர்வைசராக பணியாற்றிய கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வள்ளம்படுகை கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரரது மகன் ஐயப்பன் என்பவருடன் சேர்ந்து ஆறு மாதங்களாக திட்டம் தீட்டி லாரியை திருடி சென்று, அந்த லாரியை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வடலூர் பகுதியை சேர்ந்த சித்திரைவேல் என்பவரது மகன் மணிபால் வயது 32 என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து இவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து லாரி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர், மேலும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலிருந்து கடலூருக்கு லாரியை எடுத்துச் சென்ற மற்றொரு லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சேத்தியாத்தோப்பு மேட்டு தெருவை சேர்ந்த ராமானுஜம் என்பவரது மகன் ஆறுமுகம் வயது 29 என்பவரையும் கைது செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் இருசக்கர வாகனத்தின் மதிப்பு சுமார் 31 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர், மேலும் லாரி திருடு நடைபெற்ற 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து லாரியை பறிமுதல் செய்த பிரம்மதேசம் போலீசாரை திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் வெகுவாக பாராட்டினார்.