மகாதீப நெய் காணிக்கை ஆன்லைனில் செலுத்தும் முறை
திருவண்ணாமலை மலை மீது நவம்பர் 26ந் தேதி ஏற்றப்பட உள்ள மகாதீபத்திற்கான நெய் காணிக்கை ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23ந் தேதி வியாழக்கிழமை மகா தேரோட்டமாகும். 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை பயன்படுத்தப்படுவது வழக்கம்.
சென்ற ஆண்டு மகாதீபத்தை தரிசிக்க 35 லட்சம் பக்தர்கள் வந்த நிலையில் இந்த ஆண்டு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதுமலை மீது ஏற்றப்படும் மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். இதற்கு பயன்படும் நெய் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் ஆவின் நிறுவனத்திடமிருந்து வாங்குகிற நிலையில் பக்தர்களிடமிருந்தும் நெய் காணிக்கையை பெறுகிறது.
ஆவினில் ஒரு கிலோ நெய் ரூ.700க்கும், அரை கிலோ நெய் ரூ.365க்கு விற்பனை செய்யப்பட்டாலும் நெய் காணிக்கைக்கு குறைந்த விலையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒரு கிலோ நெய்க்கு 250 ரூபாயும், அரை கிலோ நெய்க்கு 150 ரூபாயும், கால் கிலோ நெய்க்கு 80 ரூபாயும் காணிக்கையாக பெறப்படுகிறது. இந்த காணிக்கையை பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் உள்ள சிறப்பு கவுன்டர்களில் செலுத்தலாம். கடந்த 21ந் தேதி இந்த கவுன்டர்கள் துவக்கப்பட்டாலும் ஆன்லைனில் காணிக்கையை செலுத்தும் வசதி துவக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் ஆன்லைனில் செலுத்தும் வசதி துவக்கப்பட்டுள்ளது.இதற்காக பக்தர்கள் https://annamalaiyar.hrce.tn.gov.in/hrcehome/ index_temple.php?tid=20343 என்ற அண்ணாமலையார் கோயில் இணையதளத்தில் சென்று நெய் காணிக்கை https://annamalaiyar.hrce.tn.gov.in/ticketing/s ervice_edonation.php? tid=20343&scode=21&sscode=1&group_id=1&f ees_sIno=23974&group_id=1&action=P என்ப தை தேர்வு செய்ய வேண்டும். அதில் வரும் விண்ணப்பத்தில் பெயர், கதவு எண், எந்த நாடு? எந்த மாநிலம்? எந்த ஊர்? எந்த மாவட்டம்? பின்கோடு விவரம், இமெயில், போன் நம்பர் ஆகியவற்றை நிரப்பிட வேண்டும்.
முக்கியமாக பேன் கார்டு நம்பரை தெரிவிக்க வேண்டும். மேலும் குறிப்புரையில் ஏதாவது கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். இது மட்டுமன்றி காணிக்கை தொகையை குறிப்பிட்டு அருகில் உள்ள கேப்ட்சா(அங்கீகார மதிப்பு) குறியீடை பதிவிட வேண்டும். பிறகு விதிமுறை பகுதியை டிக் செய்து விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.அண்ணாமலையார் கோயிலில் நெய் காணிக்கை கவுன்டர்களை கூடுதலாக அமைக்க வேண்டும் எனவும், இந்த கவுன்டர் எங்கு உள்ளது என்பது குறித்து பக்தர்கள் வரும் பகுதிகளில் விளம்பர பேனர்களை வைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.