நில ஆக்கிரமிப்பு - எஸ்பி அலுவலகத்தில் மனு
கரூரில் நில ஆக்கிரமிப்பில் ஈடுப்பட்டுவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க விவசாயிகள் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.;
மனு அளித்தவர்கள்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் கரூர்- திருச்சி சாலையில் சுமார் 7.50 ஏக்கர் நிலத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த விபீஷ்னன், சுந்தரம், சுவாதிகா, சச்சிதா ஆகியோர் பெயரில் கிரயம் பெற்றனர். இதில் விபீஷ்னன் மற்றும் சுந்தரம் காலமாகிவிட்டதால், சுந்தரத்தின் மகள்கள் நான்கு பேர் அந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலத்தில் 2 3/4 ஏக்கர் பங்கு இருப்பதாக கூறி சுரேஷ் என்பவர் போலி ஆவணங்களை வைத்து நிலத்தின் மீது உரிமை கொண்டாடி,நில உரிமையாளர்களிடம் கடந்த சில நாட்களாக மிரட்டல் விடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஒரு மணி அளவில், வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நில உரிமையாளர்கள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ரகு, குமார் உள்ளிட்ட அடையாளம் தெரியாத நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென அந்த நிலத்தில் கம்பி வேலி அமைத்தனர். இதைப் பார்த்த நில உரிமையாளர்கள் கம்பி வேலி அமைக்க ஆட்சேபம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது,இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நில உரிமையாளர்கள் தாந்தோணி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி தனலட்சுமி கூறும்போது,
போலியான ஆவணங்களை வைத்து எங்கள் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். தட்டி கேட்டால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுகின்றனர். எனவே எங்களுக்கு உயிர் பாதுகாப்பும், எங்களது நிலத்திற்கு பிரச்சனை ஏதும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.