மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி எண்ணைக்கிணறு பராமரிப்பு பணிக்கு எதிர்ப்பு
மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் ஆர்டிஓக்கு மனு ஒன்றை அளித்தார் .
மயிலாடுதுறை அடியாமங்கலம் கிராமத்தில் ஒஎன்ஜிசி கட்டுப்பாட்டில் இரண்டு எண்ணெய் கிணறு உள்ளது. 2015-ஆம் ஆண்டு அந்த எண்ணெய் கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டு அருகில் இருந்து தனியார் பள்ளி மாணவிகள் மயக்கமடைந்தனர். அதனை பார்வையிட வந்த வட்டாட்சியரும் மயக்கமடைந்தார்.
அரை மணிநேரத்தில் பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, அவர்களது உயிர் பாது காக்கப்பட்டது. அன்றைய தினம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி அடியாமங்கலம் கிணற்றில் எந்த பணியும் செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர். ஆனால் தற்போது அடியாமங்கலம் எண்ணெய் கிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அந்த பகுதியில் ஒஎன்ஜிசி சுத்தம் செய்துவருகிறது. குத்தாலம் சேத்திரபாலபுரத்தில் ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை 8 கிணறுகள் மராமத்து பணிகள் மேற்கொள்கிறோம் என்று கூறி ஒவ்வொரு கிணற்றையும் ஒன்றரை மாதம் பராமரிப்பு செய்வோம் என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம்; மனு கொடுத்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. நாகை மாசுக் கட்டுப்பாட்டு பொறியார் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார்கள். அடிப்படை ஆவணங்களை கேட்டோம் இதுவரை கொடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டதற்கும் சரியான பதில் கொடுக்கவில்லை. இந்த அரசுக்கு கெட்டப்பெயர் அதிகாரிகளால்தான் வந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்புக்கு எதிராக பழைய கிணறுகளில் சைடு ட்ராக்கிங் முறையில் பூமிக்குள் குழாய் அமைக்கப்படும் என ஒஎன்ஜிசி அறிவித்துள்ளது. ஓஎன்ஜிசி நிர்வாகம் வரம்பு மீறி இதுபோன்ற பணிகளை மேற்கொண்டால் மக்கள் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்றார்.