இராமநதி-ஜம்புநதி கால்வாய் திட்டப்பணியை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆய்வு

இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணியை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-25 09:35 GMT
 முன்னாள் மாவட்ட செயலாளர் ஆய்வு

இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசினித்துரை ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்தின் தென் பகுதி, கடையம் ஒன்றியத்தின் வடபகுதியில் உள்ள 21 குளங்களின் நீராதாரத்தை உறுதிப்படுத்திடவும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையிலும்,

இராமநதி அணையின் உபரி நீரை, ஜம்புநதியின் பாசன பகுதிக்கு கொண்டு வருவதற்காக மேல்மட்ட கால்வாய் அமைக்க வலியுறுத்தி கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 இத்திட்டத்திற்கு 2015 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு ரூ.41 கோடி நிதி ஒதுக்கியதாக 110 விதியின் கீழ் அறிவித்ததுடன், பணியும் தொடங்கியது. ஆனால் முறையாக வனத்துறையில் அனுமதி பெறாமல் பணி தொடங்கியதால் வனத்துறை அதிகாரிகளால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 2021ம் ஆண்டு திமுக அரசு அமைந்தவுடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை அப்போதைய மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் நேரில் சந்தித்து, இத்திட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துக்கூறியதுடன், பணிகளை விரைந்து தொடங்கிட நடவடிக்கை எடுக்கும் பணி தொடர் கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக வனவிலங்கு உயிரின குழு கூட்டத்தில் இத்திட்டத்திற்கு, தமிழக வன உயிரின குழு அனுமதி வழங்கியதுடன், மத்திய அரசு தலைமையில் இயங்கும் மத்திய வன விலங்கு உயிரின பாதுகாப்பு குழுவிற்கு பரிந்துரை செய்தது. அதைத்தொடர்ந்து மத்திய உயிரின வனவிலங்கு பாதுகாப்பு குழுமம் இத்திட்டத்தை தொடங்கி, நிறைவேற்றிட அனுமதி வழங்கியது. 

 இதைத்தொடர்ந்து இத்திட்டத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.41 கோடியுடன் கூடுதலாக ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முறையான அனுமதி மற்றும் கூடுதல் நிதி கிடைத்ததையடுத்து தற்போது கிடப்பில் போடப்பட்ட இத்திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்பணிகளை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநான், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரையுடன் இணைந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டம் குறித்து உதவி கோட்ட பொறியாளர் முத்து மணிகண்டன், உதவி பொறியாளர் தங்க ஜெய்லானி ஆகியோரிடம் கேட்டறிந்ததுடன், பணிகளை துரிதப்படுத்தி ஓராண்டிற்குள் நிறைவேற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 50 ஆண்டு கால கனவை நனவாக்கிட வேண்டுமென அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News