நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகரமன்ற கூட்டம்
குமாரபாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் - தி.மு.க அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
By : King 24x7 Website
Update: 2024-02-28 17:43 GMT
நாமக்கல் மாவட்டம்குமாரபாளையம் நகராட்சியின் நகரமன்ற சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். குமாரபாளையம் நகராட்சி பகுதிக்கு வாரச்சந்தை திடல் கட்டுவதற்காகவும் மற்றும் குமாரபாளையம் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்காகவும் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு 10 கோடி ரூபாய் ஒதுக்கி, திட்டப் பணிகள் நடைபெற அடிக்கல் நாட்டியதற்கு நன்றி தெரிவித்து அனைத்து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த நகர்மன்ற துணை தலைவர் வெங்கடேசன் பேசியதாவது: பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் வேட்பாளர்கள் வாக்குகள் சேகரிக்க ஊருக்குள் செல்ல வேண்டி உள்ளதால், நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளையும், சாக்கடை கால்வாய்களையும் தூர்வார வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். அ.தி.மு.க.வின் நகர மன்ற குழு தலைவர் பாலசுப்பிரமணி பேசியதாவது: அ.தி.மு.க, தி.மு.க என்ற கட்சி பேதங்கள் இன்றி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இரு தரப்பினரும் வேட்பாளர்களை வார்டு பகுதியில் அழைத்து செல்லும் பொழுது பொதுமக்கள் வேட்பாளர்களை முற்றுகையிடக்கூடும். குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளிலும் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கூறினார். இந்த கூட்டத்தில் சுமார் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி ஆணையாளர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். திருவிழா சமயம் என்பதால் கவுன்சிலர்கள் குறைந்த அளவில் பங்கேற்றனர்.