ஆண் கொசு உற்பத்தி ஆராய்ச்சி - அரசுகள் பரிசீலிக்க மதுரைக்கிளை உத்தரவு
ஆண் கொசுக்களை உற்பத்தி செய்வதில் ஆராய்ச்சி..மனுதாரரின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க மதுரைக்கிளை உத்தரவு!
நோய் பரப்பும் கொசுக்கள் பெருக்கதைக் கட்டுபடுத்த Wolbachia என்ற ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் உற்பத்தி செய்ய உத்தரவிட கோரி வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்து, மனுதாரரின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரை நிதேஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கொசுக்கள் வைரஸைப் பரப்பும் திறன் கொண்டவை. கொசுக்கள் மூலம் பரவும் நோய்களால், மனிதர்களுக்கு மரணம் உண்டாகுகிறது. கொசுக்கள் அதிகபட்சமாக 50 கி.மீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்டவை. இந்தியாவில் அனோபிலிஸ், ஏடிஸ் மற்றும் கியூலெக்ஸ் ஆகியவை மலேரியா, டெங்கு, நிணநீர் ஃபைலேரியாசிஸ் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்றவற்றைப் பரப்புவதில் முக்கியமான கொசு வகை ஆகும். பருவ மழைக்காலங்களில் பலத்த மழை பெய்து, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து விரைவில் நோய்களை பரப்புகிறது. டெங்கு (Aedes aegypti and albopictus Mosquitoes), சிக்கன்குனியா (Aedes aegypti and Aedes albopictus Mosquitoes), மலேரியா (Anopheles) (Epheles) லெக்ஸீம்ஃபாட்டிக் கொசுக்கள் போன்ற பல்வேறு வகையான கொசுக்களிலிருந்து தொற்று வேறுபடுகிறது.
இது மரணத்திற்கு வழிவகுக்கும். இந்தக் கொசுக்களால் பொதுமக்களுக்கு அதிக இடையூறு ஏற்படுவதால், 'தமிழ்நாடு பொதுச் சுகாதார சட்டம் 1939'ஐ அறிமுகப்படுத்தினர். கொசு உற்பத்தியைத் தடுக்க மக்கள் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உள்ளாட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் நவீன முறையில் கொசு உற்பத்தியை தடுக்கின்றனர். பெண் கொசுக்கள் தான் எல்லா நோய்களையும் உண்டாக்கும் என்பதால், சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் ஆண் கொசுக்களை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கி உள்ளனர்.
அவை, பெண் கொசுக்களுடன் இணைந்தாலும், இந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காது. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆண் கொசுக்களுக்கு "Wolbachia" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நோய் பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுத்து, மக்கள் பாதுகாப்பாக வாழ வழிவகுத்து உள்ளது. நம் நாட்டில், ஆண் கொசுக்களை உற்பத்தி செய்யும் முறை ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. எனவே நோய் பரப்பும் கொசுக்கள் பெருக்கதைக் கட்டுபடுத்த இந்த வகை ஆண் கொசுக்களை உற்பத்தி செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொசுக்களினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தவும், கொசு உற்பத்தியைக் குறைப்பதற்கான வழி வகைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், கொசுக்களைக் கட்டுபடுத்த ஆண் கொசுக்களை உயற்பத்தி செய்யும் நடவடிக்கை ஆராய்ச்சி நிலையில் உள்ளது. இந்த நிலையில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பொது நலன் கருதி, மனுதாரரின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.