திருநங்கைகளுக்கு நலவாரியம்,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு - தமிழக அரசு

ஏராளமான நலத்திட்டங்களுடன் திருநங்கைகளுக்கு நலவாரியம், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

Update: 2023-12-07 04:10 GMT

உயர்நீதிமன்ற மதுரை கிளை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை: 'தமிழ்நாட்டில் ஏராளமான நலத்திட்டங்களுடன் திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டு, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது' என்று ஐகோர்ட்டில் அரசு தெரிவித்து உள்ளது. மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2015ல் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், 'திருநங்கைகள் உள்ளிட்ட இதர மாற்று பாலினத்தவரின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் கடந்த 15.4.2014ல் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி செயல்படுத்துமாறு உத்தரவிட்டது. அதில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்று பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, உரிய மருத்துவ வசதி, தனி கழிப்பறை ஆகியவற்றை செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் இருக்கும் சிக்கல்களை களைய வல்லுநர் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை கூறியிருந்தது.

இதனை 6 மாதத்திற்குள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது. ஆனால், அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ''உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு முறையாக அமல்படுத்தியுள்ளது. திருநங்கைகள் உள்ளிட்ட மாற்று பாலினத்தரவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு என தனி அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன.

மூன்றாம் பாலினத்தவர்களை அடையாளம் கண்டு, அடையாள அட்டை வழங்குவதற்கு என கலெக்டர்கள் தலைமையில் குழுவும் செயல்படுகிறது. ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா, வங்கி கடன் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. காவல்துறை, மருத்துவர், அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், சத்துணவு அமைப்பாளர், வாட்ச்மேன் உள்ளிட்ட பல வகையான அரசு பணிகளும் வழங்கப்பட்டுள்ளன. கழிப்பறை வசதி, அறுவை சிகிச்சை வசதி உள்ளிட்டவை உள்ளன. 40 வயதை கடந்தோருக்கு  மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இவர்களது நலனுக்காக ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டு வருகிறது. தனி செல்போன் செயலி பயன்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சிறந்த திருநங்கை விருது வழங்கப்படுகிறது'' என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News