மீண்டும் ஸ்டாலின் ஒரு 'பொம்மை முதலமைச்சர்' என்பதை நிரூபித்து விட்டார்: இபிஎஸ் தாக்கு

மீண்டும் ஸ்டாலின் ஒரு 'பொம்மை முதலமைச்சர்' என்பதை நிரூபித்து விட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-30 13:53 GMT

EPS

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்லைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பல விதமான வியூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த அசம்பாவிதத்துக்கு விஜய்தான் காரணம் என்று ஒருதரப்பினரும், வேண்டுமென்றே குறுகலான இடத்தை கொடுத்த திமுக அரசுதான் காரணம் என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார். அதில், "கரூரில் நான் கண்ட காட்சிகள் கண்களை விட்டு இன்னும் அகல மறுக்கின்றன. எந்த கட்சி தலைவரும் தனது தொண்டர்கள் மரணிப்பதை விரும்ப மாட்டார்கள். எனவே, இந்த விஷயத்தில் வீண் அவதூறுகளை பரப்ப வேண்டாம். பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்" என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வீடியோவை குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கும் முதலமைச்சர் ஒரு 'பொம்மை முதலமைச்சர்' என்பதற்கு அவர் வெளியிட்ட ஃபோட்டோஷூட் வீடியோவே சிறந்த உதாரணம். கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேற்று சந்தித்தேன். அப்போது, இந்த விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது என்றும், உறவுகளை இழந்து சோகத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல்தான் தேவை எனவும் தெிரவித்திருந்தேன். அதேபோல, இந்த சம்பவத்தில் மக்கள் எழுப்பும் சந்தேகங்களையும் நான் பதிவு செய்திருந்தேன். அதற்கு பதிலளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே.. உங்கள் கட்சியினர், தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்களே.. அந்த அவதூறையா கூறுகிறீர்கள்? உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள், அதை பற்றி பொதுமக்கள் பேசுவது - இவற்றையெல்லாம்தான் அவதூறு எனக் கூறுகிறீர்களா? உங்கள் அமைச்சர் (அன்பில் மகேஷ்) ஒருவர், அழுவது போல நடிக்க தெரியாமல் மாட்டிக் கொண்டாரே - அதை கூறுகிறார்களா? இல்லையெனில், உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிராயத்து்ககு போட்டோஷூட் எடுத்துவிட்டு, துபாய்க்கு சுற்றுலா சென்றாரே - அதுவா? கள்ளக்குறிச்சியில் உங்கள் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? சென்னை ஏர்ஷோவை நீங்கள் குடும்பத்துடன் கண்டுகளித்தபோது, கூட்டநெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே - அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? கரூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்கள் வீடியோதான் பல அரசியல் சந்தேகங்களை எழுப்புகிறது. இதில் இன்னும் கொடுமையான விஷயம், நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரிக்கும் காட்சிகள் தான். அதை பார்த்தாலே அது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் EYE WASH ஆணையம் என்பதையே காட்டுகிறது. மக்களுக்கு உங்கள் விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க வேண்டுமென்றால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்பப்படுத்தாதீர்கள்" என அவர் கூறியுள்ளார்.

Similar News