முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கண்ணில் பயம் தெரிகிறது: எடப்பாடி பழனிசாமி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கண்ணில் பயம் தெரிகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-10-03 09:37 GMT

EPS

தருமபுரியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கொடூரமான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கி இருந்தால் 41 உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். ஆனால், பாதுகாப்பு முறையாக இல்லாததால் 41 உயிரிழப்புகளுக்கும் காரணம் தமிழக அரசுதான். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி என்றுதான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களைக் காக்கக் கூடிய பொறுப்பு அரசுக்குதான் உள்ளது. பேரணி, பொதுக் கூட்டம், ஆர்பாட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. காவல் துறை முதல்வர் வசம்தான் உள்ளது. காவல் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியான முறையில் உத்தரவு பிறப்பித்திருந்தால், சரியாக காவல் துறை செயல்பட்டு பாதுகாப்பு அளித்திருந்தால் 41 பேரை நாம் இழந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தமிழகத்தை தலைகுணிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால், தமிழகம் தலைகுணிந்து நிற்கிறது. நாடே அதிர்ந்து போய் கிடக்கிறது. அரசுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். யார் யார் மீதோ பழிசுமத்தி தப்பித்துக் கொள்ளக் கூடாது. ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை ஸ்டாலின் இனியாவது உணர வேண்டும். இனி நடக்கும் பொதுக் கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். முதல்வர் கூட்டம் நடத்தினால் ஆளே இல்லாத இடங்களில் கூட சாரை சாரையாக காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு வழங்குகிறார்கள். ஆனால், ஆயிரக்கணக்கானோர் கூடும் எதிர்க்கட்சிகள் கூடும் கூட்டங்களுக்கு ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த ஆட்சியின் லட்சணத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் மக்கள், தகுந்த பதிலடியை வழங்குவார்கள்” என்றார். அதேபோல, “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கரூருக்கு வந்து பார்த்துவிட்டு உடனே மீண்டும் சுற்றுலாவுக்கு சென்றுவிட்டார். கரூரில் பெரிய துயரச் சம்பவம் நடந்த நிலையில் துணை முதல்வர் எங்கே போனார்? கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏன் பதறுகிறார், அவர் கண்ணில் பயம் தெரிகிறது” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

Similar News