ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் திடீரென திமுகவில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் திடீரென திமுகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.;
அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்த ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்கினார். அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாற்றுகட்சிகளில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்ஸுன் தீவிர ஆதரவாளராக இருந்த வழக்கறிஞர் சுப்புரத்தினம், திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இருந்து நேராக அண்ணா அறிவாலயம் சென்ற அவர், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் திமுக தலைமை கழக நிர்வாகிகள், கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றவரான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அது வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்ற நிலையில், வைத்திலிங்கத்தின் வருகை மேலும் திமுகவுக்கு வலுசேர்க்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கிடையே, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் திமுக சார்பில் வைத்திலிங்கம் மீண்டும் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுவது உகந்ததாக இல்லை. இன்று தமிழ்நாடு முதல்வரை தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதில் உள்ளார் ஸ்டாலின். அதனால் அண்ணா தொடங்கிய தாய்கழகத்தில் இணைந்துள்ளேன். அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது. கூட்டணி தொடர்பான முடிவில் ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன்.அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு வந்தது ஆனால் தனியாக இணைய விரும்பவில்லை. பிரிந்தவர்கள் ஒன்றாக சேர வேண்டும் என்ற நோக்கில் நான் அதிமுகவிற்கு செல்லவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.