அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி! திமுக கூட்டணியைச் சமாளிக்குமா?
சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிகட்ட வேலைகளில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறது திமுக. கூட்டணியைப் பொருத்தவரை கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உருவான திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மமக, தவாக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தொடர்கின்றன.;
சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிகட்ட வேலைகளில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறது திமுக. கூட்டணியைப் பொருத்தவரை கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உருவான திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மமக, தவாக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தொடர்கின்றன. தொடர் வெற்றிகளையும் பெற்றுவருகின்றன. அதிமுக கூட்டணியோ குழப்பங்களின் கூடாராமாக இருக்கிறது. அந்தக் கூட்டணிக்கு யார் தலைமை என்பதிலேயே குழப்பம் நீடிக்கிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை, கூட்டணி குறித்த முடிவுகளை எடப்பாடி பழனிசாமிதான் எடுப்பார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அன்புமணியின் பாமகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர தயாராக இல்லை. டிடிவி தினகரன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்னிலையில் கூட்டணியில் இணைந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தனது தலைமையிலான கூட்டணியில் சேரும் கட்சியை வரவேற்பதற்குக் கூட போகவில்லை. சமூக ஊடகங்களில் டிடிவி தினகரனை வரவேற்று பதிவிட்டதோடு நிறுத்திக்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று பேசிவந்தவர் டிடிவி தினகரன். அந்தக் காரணத்தால் தான் கூட்டணியை விட்டே வெளியேறினார். அதிமுக தொண்டர்களுக்கும் அமமுக தொண்டர்களுக்கும் இடையே சமூக ஊடகங்களில் வார்த்தைப் போர் நடந்துகொண்டிருந்த சூழலில், விஜய்க்கு ஆதரவாக நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டிருந்தார் டிடிவி தினகரன். என்ன ‘நடந்ததோ’ தெரியவில்லை, இன்று திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். ஆனாலும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா என்ற கேள்விக்கு டிடிவி பதிலளிக்கவில்லை. திமுக கூட்டணியை எதிர்க்கவேண்டும் என்றால், எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்க வேண்டும் என்று பலரும் பேசிவந்த நிலையில், நான்கு திசைகளிலும் சிதறிக்கொண்டு ஓடக்கூடிய கூட்டணி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்றால், ஆளும் அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடையே இருக்கவேண்டும்; கடும் கோபம் இருக்கவேண்டும்; அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆளும் கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இருக்கவேண்டும், வீழ்த்துவதற்கான காரணம் வலுவாக இருக்கவேண்டும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது, அவருக்கு எதிராக ஒரு ஆளுமைமிக்க, செல்வாக்குமிக்க தலைவரை முன்னிறுத்த வேண்டும். இதில் ஏதாவது ஒன்றிற்குக் கூட அதிமுக கூட்டணியில் ‘டிக்’ அடிக்க முடியவில்லை. பிறகு எப்படி திமுக கூட்டணியை வெல்ல முடியும்? திமுக கூட்டணியை முடிவு செய்துவிட்டு, தேர்தல் பரப்புரைக்கான திட்டத்தையே முடிவுசெய்து தேதிகளை அறிவித்து வருகிறது. மாநில மாநாடு, இளைஞரணி மாநாடு, மகளிர் அணி மாநாடு, தெருமுனைக் கூட்டம், மாவட்ட வாரியாகப் பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி, கூட்டணிப் பேச்சுவார்த்தை என்று அடுத்த வாரமே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அசுர பலத்துடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவோ இன்னும் கூட்டணிக்கே குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கிறது. திமுக அரசுக்கு எதிராக அமையும் இயற்கையான கூட்டணி என்றால்தான் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்குள் கெமிஸ்ட்ரி உருவாகும். அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு பயந்து உருவாகும் கூட்டணியில் தலைவர்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் உருவாகாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தேர்தலுக்கு முன் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் தங்களை இணைத்துக்கொள்ள எந்த கட்சியும் முனைப்பு காட்டவில்லை, அவசரம் காட்டவில்லை. தேர்தலுக்குப் பிறகு, இந்தக் கட்டாயக் கூட்டில் இணைந்தவர்களில் யார் முதலில் வெளியேறுவார்கள் என்பதில் கடும் போட்டி இருக்கும் என்பது மட்டும் உறுதி.