தடுமாறும் ஏர் இந்தியா வான்கூவர் விமானம் 22 மணி நேரம் தாமதம்: மீண்டும் மீண்டும் கோளாறு

Update: 2024-06-03 03:28 GMT

Air

டெல்லியிலிருந்து வான்கூவர் செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 22 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது. டெல்லியிலிருந்து கனடாவின் வான்கூவர் நகரத்திற்கு ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு புறப்பட இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற வந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 22 மணி நேர தாமதத்திற்குப் பிறகு வான்கூவர் விமானம் நேற்று அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு சென்றது.தொழில்நுட்ப கோளாறு மற்றும் விமானப் பணியாளர்கள் பணி நேரத்தை கடந்து விட்டதாலும் இந்த தாமதம் ஏற்பட்டதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 30ம் தேதி டெல்லி-சான் பிரான்சிஸ்கோ விமானம் 8 மணி நேர தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டது. அந்த விமானத்தில் ஏசி செயல்படாததால் பயணிகள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது. இதே போல, கடந்த 24ம் தேதி மும்பை-சான் பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமானமும் புறப்படுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. இவ்விரு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Similar News