வினேஷ் போகத் தகுதி நீக்கம் - இந்தியா மேல்முறையீடு

Update: 2024-08-07 08:58 GMT

வினேஷ் போகத்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி மேல்முறையீடு செய்தது.

இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உடல் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடக்கவிருந்த 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் சாராவை எதிர்த்து இந்தியாவின் வினேஷ் போகத் களமிறங்க தயாராகி வந்தார்.

நேற்று நடந்த ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதிப் போட்டி மற்றும் அரையிறுதி என்று 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து வென்று ஒலிம்பிக் தொடரில் பதக்கத்தை உறுதி செய்திருந்தார். வெள்ளிப் பதக்கம் உறுதியான நிலையில், தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பலரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவாக நம்பிக்கையுடன் பேசி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு வினேஷ் போகத் தனது உடல் எடையை பரிசோதனை செய்த போது, சில கிராம்கள் கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இரவு நேரத்தில் தூங்காமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக சாப்பாடு கூட எடுத்துக் கொள்ளாமல், சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

தற்போது வினேஷ் போகத் எடையை ஒலிம்பிக் நிர்வாகிகள் பரிசோதனை மேற்கொண்ட போது, 50 கிலோவுக்கு அதிகமாக சுமார் 100 முதல் 150 கிராம் வரை கூடுதலாக இருந்துள்ளது. மல்யுத்தம் மற்றும் பளுதூக்குதல் ஆகியவற்றை பொறுத்தவரை போட்டி நடக்கும் ஒவ்வொரு நாளிலும் சோதனை செய்யப்படும். இருப்பினும் இந்திய நிர்வாகிகள் சார்பாக கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. ஆனால் ஒலிம்பிக் நிர்வாகிகள் கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். இதனால் 100 முதல் 150 கிராம் உடல் எடை அதிகரிப்பால், ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் விளையாடவிருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதும், பதக்கம் இல்லாமல் வினேஷ் போகத் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய பெண் வினேஷ் போகத் தான். அவருக்கு இப்படி நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வினேஷ் போகத்திற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதனிடையே இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். மேலும் வினேஷ் தகுதி நீக்கத்துக்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டி தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவிக்க வேண்டும் எனவும் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் வினேஷ் போகத் முன் உள்ள வாய்ப்புகள் குறித்து பி.டி.உஷாவிடம் கேட்டறிந்த பிரதமர், அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News