சர்வதேச டி20 கிரிக்கெட் : ஆஸ்திரேலியா புதிய சாதனை
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில், பவர் பிளேவில் (POWERPLAY) ஓவர்களில் 113 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்காட்லாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி, எடின்பர்க்கில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் ஜேக் ஃபிராஸர் டக் அவுட்டானார்.
எனினும் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டு, ருத்ர தாண்டவமாடினார்.
பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் எட்டியது. இதன் மூலம் பவர் பிளேவில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது ஆஸ்திரேலியா.
இதற்குமுன் தென்னாப்ரிக்க அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 102 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஆஸ்திரேலிய அணி முறியடித்தது.
பவர் பிளேவில் டிராவிஸ் ஹெட் மட்டும் 22 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். பவர் பிளேவில் தனி நபரின் அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில், 156 ரன்கள் சேர்த்து வெற்றியை வசமாக்கியது.