பாரலிம்பிக்கில் தமிழக வீராங்கனை சாதனை!

Update: 2024-09-03 10:30 GMT

 பாராலிம்பிக் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வாலும் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். மேலும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இறுதிப்போட்டியில் 8 வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியில், இந்திய வீராங்கனை ரூபினா 211.1 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதன் தொடர்ச்சியாக பிரீத்தி பால் வெண்கல பதக்கம், ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷார் குமார்ஜே வெள்ளிப் பதக்கம் எனத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இதனையடுத்து ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் நேற்று (02.09.2024) தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். 

இந்த நிலையில், இன்று தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு வீராங்கனை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பேட்மிட்டன் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-26 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் என்ற வீராங்கனை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதற்கிடையில், ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் வீசி இந்தியாவைச் சேர்ந்த வீரர் சுமித் அண்டில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.   

Tags:    

Similar News