ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் தொடர் - சவுராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ் நாடு !!
சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 203 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 367 ரன் குவித்து ஆல் அவுட்டானது (நாராயன் ஜெகதீசன் 100, சாய் சுதர்சன் 82, பிரதோஷ் 49, இந்திரஜித் 40, சித்தார்த் 38, முகமது 26*). சவுராஷ்டிரா பந்துவீச்சில் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் 6 விக்கெட் கைப்பற்றினார்.
இதை யடுத்து, 164 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி, அறிமுக வீரர் குர்ஜப்னீத் சிங்கின் இடது கை வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. அந்த அணி 14.2 ஓவரில் வெறும் 16 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தனது 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. அந்த ஆட்டம் அக்.18ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.