டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்தி 83 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி !!

Update: 2024-06-17 06:50 GMT

டி20 உலகக் கோப்பை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் பதும் நிசங்கா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய குசல் மெண்டிஸ் 29 பந்துகளில் 46 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இவர்கள் முறையே 34, 46 மற்றும் 30 ரன்களை அடித்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.

நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளையும், விவியன் கிங்மா, ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் மற்றும் டிம் பிரிங்கில் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் முறையே 31 மற்றும் 11ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் 7 ரன்களிலும், சைபிராண்ட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பிறகு வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 24 பந்துகளில் 31 ரன்களை அடித்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை சார்பில் நுவன் துஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர வமிந்து ஹசரங்கா மற்றும் மதீசா பதிரனா தலா 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா மற்றும் தசுன் சனகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 83 ரன்களில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News