பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று தங்கவேலு மாரியப்பன் சாதனை..!

Update: 2024-09-04 06:22 GMT

தங்கவேலு மாரியப்பன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாரீஸ் நகரத்தில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட வீரர்கள் பலரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாட்மிண்டன் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், நித்யஸ்ரீ சிவனும் பாட்மிண்டன் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இவர்களைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்ட தங்கவேலு மாரியப்பன் வெண்கலம் வென்று அசத்தினார். இதனால் தொடர்ச்சியாக மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

தங்கவேலு மாரியப்பன் தனது முதல் பாரா ஒலிம்பிக் போட்டியில் 2016 ரியோ டி ஜெனீரோவில் கலந்து கொண்டார். உயர் தாண்டுதல் T42 பிரிவில் கலந்து கொண்ட அவர் தங்கப்பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கிலும், மாரியப்பன் கலந்து கொண்டு தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். உயர் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அதைப்போலவே இம்முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. உயரம் தாண்டுதலில் T63 பிரிவில் கலந்து கொண்டார்.

அவருடன் மற்றொரு இந்திய வீரரான சரத்குமார் கலந்து கொண்டார். இருவரும் குறைந்தபட்ச உயரமான 1.81 மீட்டரை எளிதாக தாண்டினர். இதற்கு அடுத்த சுற்றில் 1.85 மீட்டர் உயரத்தை மாரியப்பன் தாண்டி முதலிடம் பிடித்தார். ஆனால், 1.88 மீட்டர் உயரம் தாண்டுதலில் தங்கவேலு மாரியப்பன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதல் இரு இடங்களை முறையே அமெரிக்க வீரர் ஏல்ரா, இந்திய வீரர் சர்தகுமார் ஆகியோர் தாண்டினர். இதற்கு அடுத்த சுற்றுகளில் தங்கவேலு மாரியப்பன் உயரம் தாண்ட முடியவில்லை. ஆனால் அமெரிக்க வீரர் ஏல்ரா 1.94 மீட்டர் தாண்டி முதல் இடம் பிடித்தார். இந்திய வீரர் சரத்குமார் இரண்டாம் இடத்தை பிடித்தார். உயரம் தாண்டுதலில் சரத்குமாருக்கு வெள்ளிப் பதக்கமும் மாரியப்பனுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.

இந்த வெற்றிகள் மூலம் பாரீஸ் பாரா ஓலிம்பிக் போட்டி பதக்க பட்டியலில் இதுவரை இந்தியா மூன்று தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 18 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. கடந்த டோக்யோ பாரா ஒலிம்பிக் போட்டியிலும் இதே அளவுதான் இந்தியா பதக்கத்தை வென்றிருந்தது. இதனிடையே வெள்ளி பதக்கம் வென்ற சரத்குமாருக்கும், வெண்கல பதக்கம் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Tags:    

Similar News