மூன்றாவது டி-20 போட்டி - இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல் !!
மூன்றாவது 'டி-20' போட்டியில் இந்திய அணி வெற்றி அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது.
மூன்றாவது போட்டி, செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று 3-வது டி20 போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோத உள்ளது.
முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் 202 ரன்கள் குவித்து எளிதில் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி 2-வது ஆட்டத்தில் வேகமும் பவுன்சும் கூடிய ஆடுகளத்தில் தடுமாறியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்னில் அடங்கியது.
இந்த குறைவான இலக்கை கொண்டும் எதிரணிக்கு இந்தியா கடும் குடைச்சல் கொடுத்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆனால் கடைசி கட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (47 ரன்) நிலைத்து நின்று ஆடி தங்கள் அணியை 19-வது ஓவரில் கரைசேர்த்தார்.
இந்திய அணி இங்கு 2018-ம் ஆண்டு ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடி இருக்கிறது. அதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. மொத்தத்தில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணிக்கே தொடரை வெல்லும் வாய்ப்பு உருவாகும் என்பதால் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.