மாஸ்டர் ஸ்கெட்ச் போடும் விஜய் - ஜெயலலிதாவை மிரட்டியவரின் டிவி சேனலை விலைக்கு வாங்க ரெடி!

விஜய் தனது அரசியல் பயணத்திற்கு உதவியாக தொலைக்காட்சி சேனலை விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-02-09 06:59 GMT

vijay tvk

புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்திற்கு உதவியாக தொலைக்காட்சி சேனலை விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், நீண்ட நாட்களாகவே அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் அடிப்பட்டு வந்தன. அதற்கு ஏற்றார் போல், விஜய் நடித்த கத்தி, சர்க்கார் உள்ளிட்ட அண்மையில் வெளியான படங்கள் அரசியல் பேசுவதாக இருந்தன. சர்க்கார் படத்தில் இலவச பொருட்கள் வழங்குவதில் தொடங்கி ஆட்சி செய்வது வரை ஆளும் மற்றும் ஆண்ட திராவிட கட்சிகளை விமர்சித்திருந்தார். 

திரைப்படங்களில் விஜய்யின் அரசியல் சாயல் இருப்பதால் அவரது படம் ரிலீசாவது என்றாலே சென்சார் போர்டு கடுமையை காட்டி வந்தன. இதனால், விஜய் அரசியல் மேலும் பிரபலமாக பேசப்பட்டது. இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்ட பணிகளில் சைலெண்ட்டாக விஜய் ஈடுபட்டு வந்தார். கடந்த ஆண்டு பள்ளி பொதுத்தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்த விஜய் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து பனையூரில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வரும் விஜய், மாலை நேர கல்வி, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவது என பலகட்ட அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். 

இதற்கிடையே 2022ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தனித்து போட்டியிட்டு சில வார்டுகளில் வெற்றிப்பெற்றனர். அதன் மூலமும் விஜய் மக்கள் இயக்கத்தினரின்  பணி மேலும் விரிவடைந்தது. இந்த சூழலில் கடந்த 2ம் தேதி தனது அரசியல் கட்சியை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக அறிவித்த விஜய், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், 2026ம் ஆண்டி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். 

இந்த சூழலில் தனது அரசியல் பயணத்திற்கு உதவியாக விஜய் தொலைக்காட்சி சேனலை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்க வேண்டும் என்றால் சில நடைமுறை சிக்கல்களும், கால விரையமும் ஏற்படும் என்பதால், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ஒரு சேனலை விஜய் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் தொடங்கிய கேப்டன்  டிவி கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் இருப்பதால் அதனை விற்க முடிவெடுத்துள்ளதாகவும், அதை விஜய் வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஏற்கெனவே விஜய் டிவி, விஜய் ஸ்டார் உள்ளிட்ட பெயர்களில் தொலைக்காட்சி சேனல்கள் இருப்பதால், தான் தொடங்க இருக்கும் புதிய சேனலுக்கு தளபதி டிவி என பெயரிட விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதேபோல் அரசியல் பணிகளை நிர்வகிக்க, மக்கள் குறைகளை கேட்க, அறிக்கை வெளியிட, மக்களை எளிதாக தொடர்பு கொள்ள தனியாக ஒரு செயலியை விஜய் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

விஜய் அரசியல் கட்சி பெயரை மட்டுமே அறிவித்துள்ளார். கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கும் நிலையில், கட்சிக்கு சின்னம் ஒதுக்குதல், கொடி உள்ளிட்டவற்றை தேர்வும் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

Tags:    

Similar News