அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதத்திற்கு 1 தொகுதி - பூவை.ஜெகன்மூர்த்தி
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதத்திற்கு ஒரு தொகுதி கேட்டுள்ளோம். திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்டுள்ளோம் என பூவை.ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் புரட்சி பாரதம் கட்சித்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை.ஜெகன்மூர்த்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், தற்போதை தமிழ்நாட்டு அரசியல் களம் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பூவை.ஜெகன்மூர்த்தி பேசியதாவது சட்டமன்றத்தில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் குறித்து வலியுறுத்தி வருகின்றோம். குறிப்பாக எஸ்சி, எஸ்டி மக்களுக்கான பாதுகாப்பு சட்டம் ஏற்கனவே முன்வடிவு வெளியிட்டு இருந்தோம். தற்பொழுது சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில் எதிர்பார்த்த கருத்துக்கள் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது என கூறினார்.
அரசுக்கு எதிராக ஏதேனும் திட்டங்கள் தீர்மானங்கள் கொண்டுவர வேண்டுமென்றால் அதனை நிறுத்துவதிலேயே சபாநாயகர் குறிக்கோளாக உள்ளார். ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகப்படியான நேரத்தை ஒதுக்கி கொள்கிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏழு நிமிடங்களை மட்டுமே பேசுவதற்கு ஒதுக்குகிறார். எதிர்கட்சிகளை பேச விடாமல் நாடாளுமன்றத்தில் பாஜக என்ன செய்கிறதோ அதையே திமுக சட்டமன்றத்தில் இங்கே செய்கிறது என குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. பள்ளிக்கூடம் கட்டுவதற்கு நிதி இல்லை என்கிறார்கள், அதே நேரத்தில் ரூ.500 கோடிக்கு திரைப்பட நகரம் கொண்டு வரப்படும் என்கிறார்கள். இது எப்படி சமூக நீதிக்கான கட்சியாக இருக்க முடியும் என தெரிவித்தார். மதவாதத்தை எதிர்கிறோம் என்கிறார்கள். ஆனால் இதே கூட்டணி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி நீடிக்குமா என்றால் நீடிக்காது எனவும் கருத்துக்கணிப்புகளில் உண்மையில்லை. கருத்துக்கணிப்புகளை பார்த்தால் பாஜக தலைவர்கள் கூட சிரிப்பார்கள். பாஜகவிற்கு ஆதரவாக அனைத்து ஊடகங்கள் செயல்படுகின்றன.
பிரதமர் சொல்லுகின்ற இடங்களில் தொடர்ச்சியாக வென்று வருகிறார்கள். அது எப்படி நடக்கிறது என்பதில் மக்கள் மனதில் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அதிகப்படியான இடங்களில் வெல்லும் எனவும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும். கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனவும் கூறினார். திமுக நடுநிலை தவறியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் தான் அடுத்த தெருவுக்கே படகில் செல்லும் நிலை ஏற்பட்டது.
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதத்திற்கு ஒரு தொகுதி கேட்டுள்ளோம் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியை கேட்டுள்ளோம் என தெரிவித்தார். பிரதமர் மோடி அனைவருக்கும் பொதுவானவராகதானே இருந்திருக்க வேண்டும். பிரதமர் அரசியலமைப்பு சட்டத்தை மீறி ராமர் கோயில் பிரதிஷ்டை செய்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பிரதமர் முன்னிலைப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்று என கூறினார். பாஜக மீதும் திமுக மீதும் மக்கள் வெறுப்புணர்வோடு உள்ளனர். தமிழகத்தில் ஆணவபடுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் அதற்கு அரசு தற்பொழுது வரை செவிசாயிக்கவில்லை என கூறினார்.