தமிழகத்திற்கு ஜனவரியில் 1,37,563  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1,37,563  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 2,81,96,899 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2024-03-15 03:59 GMT

ஆய்வுக்கூட்டம் 

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். 

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது.  கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 11,74,899  ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1,37,563  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். 

இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல் 21,85,84,846 ஆகவும், 2023 ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2,81,96,899  உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.  மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் வாய்ப்புகள் குறித்து, தங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு தெரிவித்து புதிய சுற்றுலா தலங்களின் உருவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கு பணியாற்றிட வேண்டும். 

சுற்றுலா வளர்ச்சித்திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள், உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை துணைச் செயலாளர் இரா.வீருசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் இ.கமலா, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ப.புஷ்பராஜ் உள்பட சுற்றுலாத்துறை உதவி இயக்குநர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News