ஊட்டியில் 19-வது ரோஜா கண்காட்சி துவங்கியது!
ஊட்டியில் வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ரோஜா கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோடை சீஸனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த 1995–ம் ஆண்டு 100–வது மலர் கண்காட்சி பூங்காவில் நடந்தது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்காவை தொடங்கி வைத்தார். ஊட்டி ரோஜா பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது.
மலைச்சரிவான பகுதி மற்றும் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 வகைகளை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஊட்டி ரோஜா பூங்காவின் நுழைவுவாயில் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நட்டு வைத்த ரோஜா செடி தற்போதும் உள்ளது. அந்த ரோஜா செடிக்கு ஜெயலலிதா என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. உலக ரோஜா சம்மேளனம் விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதை கடந்த 2006–ம் ஆண்டு ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் 19-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் அவர்களை வரவேற்கும் வகையில் மஞ்சள், சிவப்பு, பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கியது. வன விலங்கு பாதுகாப்பை வலியுறுத்தி 80 ஆயிரம் ரோஜாக்களால் யானை, காட்டெருமை, கரடி, புலி உள்ளிட்ட உருவங்கள் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.