அனுமதியின்றி இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்!
தூத்துக்குடியில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இருந்தபோதிலும் விதிகளை மீறி தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், உடனடியாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தலைமையில் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்செந்தூரில் இருந்து பெங்களூருவுக்கு அடுத்தடுத்து 2 ஆம்னி பஸ்கள் வந்தன. அந்த பஸ்கள் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்டு, அனுமதியின்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.
ஒரு பஸ்சில் 20 பயணிகளும், மற்றொரு பஸ்சில் 28 பயணிகளும் இருந்தனர். உடனடியாக அதிகாரிகள் அந்த 2 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்தனர். அந்த பஸ்களில் இருந்த 48 பயணிகளையும் மாற்று பஸ்சில் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.அப்போது, 3 பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டு ஊருக்கு திரும்பினர். மற்ற 45 பயணிகளையும், பாதுகாப்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பெங்களூருவுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.