பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் உள்பட 2 பேர் கைது - ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு

ஜெயங்கொண்டத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-06 04:52 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு திரவுபதி அம்மன் கோவிலின் பின்புறம் குமரன்நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சார் பதிவாளராக சேலம் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் பிரகாஷ் (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் தபால்காரராக பணியாற்றும் கரடிகுளம் சோழியன் தெருவை சேர்ந்த சாக்கரடீஸ்(வயது 54) என்பவருக்கு, அவரது மகன் பெர்னாட்ஷா என்பவர் தனது பெயரில் உள்ள நிலத்தை தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்துள்ளார். இது தொடர்பான பத்திரப்பதிவுக்காக அவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று சார் பதிவாளரை அணுகினர். அப்போது சார் பதிவாளர் பிரகாஷ், பத்திரப்பதிவு செய்ய லஞ்சமாக 1,500 கேட்டதாகவும், அதனை அலுவலக உதவியாளராக உள்ள தற்காலிக பணியாளரான விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் தெற்கு தெருவை சேர்ந்த ஜெகேந்திரன் மகன் சிவசக்திவேலிடம்(28) கொடுக்கும்படி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சாக்கரடீஸ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரையின்படி நேற்று சாக்ரடீஸ் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த அலுவலக உதவியாளர் சிவசக்திவேலிடம் ரூ.1,500-ஐ கொடுத்தார்.அதனை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, பவுன்ராஜ் உள்ளிட்ட போலீசார் உடனடியாக அங்கு சென்று, அவரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.பல மணி நேர விசாரணைக்கு பிறகு சார் பதிவாளர் பிரகாஷ், தற்காலிக பணியாளர் சிவசக்திவேல் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News