அரியலூர் அருகே +2 மாணவர் தற்கொலை - பெற்றோர் சாலை மறியல்

அரியலூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலை சம்பவத்தால் பெற்றோர்கள் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-22 05:28 GMT
 தற்கொலை
அரியலூர், மார்ச்.22- அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள விடுதியில் தங்கி போட்டித் தேர்வுகளுக்கு படித்து வந்த பிளஸ் 2 மாணவர் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9,10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பயின்று வரும் மாணவர்களில் படிப்பில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 422 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கீழப்பழுவூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் வகுப்பு பாடங்கள் மட்டுமன்றி நீட் மற்றும் ஜெஇஇ உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளை அரசு நடத்தி வருகிறது.இங்கு பயிலும் மாணவர்கள் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில், அங்கு தங்கி படித்து வந்த பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மு.கபிலனிடம்(17) பேச அவரது தந்தை முருகானந்தம் புதன்கிழமை இரவு விடுதி தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டுள்ளார். அப்போது காவலாளி, உடன் தங்கியுள்ள மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து கபிலனை அழைத்து வரச் சொல்லியுள்ளார்.கபிலன் அறையில் இல்லாததால் அருகாமையில் உள்ள அறைகளில் சென்று தேடிய போது, அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே மாணவர்கள் கதவு தாழ்பாளை உடைத்து உள்ளேச் சென்று கபிலனை மீட்டு பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள், இரவு 10.30 மணியளவில் கபிலன் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, கபிலன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து திருச்சி- அரியலூர் சாலையில் மறியில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த கீழப்பழுவூர் காவல் துறையினர், கபிலன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், கல்லூரி விடுதியில் உள்ள கண்காணிப்பு விடியோவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், அதில் கபிலன் மட்டும் தனியே அறைக்குச் செல்வதும், அதன் பின் நீண்ட நேரம் கழித்து மாணவர்கள் கதவை உடைத்துகொண்டு உள்ளேச் செல்வதும் தெரியவந்தது.இதையடுத்து, காவல் துறையினர் அன்று நள்ளிரவு 12 மணியளவில் சடலத்தை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News