காட்டு யானை தாக்கி 2 பெண்கள் பலி - உறவினர்கள் சாலை மறியல்
தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் தாசரப்பள்ளி, அன்னியாலம் கிராமங்களை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் இருவேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அன்னியாலம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி வசந்தம்மா (37) இவர் கூலி வேலை செய்து வந்தார். இன்று காலை வழக்கம்போல கூலி வேலைக்கு செல்வதற்காக வசந்தம்மா மற்றும் சிலர் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் களை பறிக்க சென்றுள்ளார்.அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை துரத்தி உள்ளது. அதில் வசந்தம்மாவை துரத்தி தூக்கி வீசி தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து உயிரிழந்த வசந்தம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வசந்த தா வின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே சாலை மறியல் செய்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் வனத்துறை அதிகாரிகள் சாலை மறியல் செய்தவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதே போல அன்னியாலம் கிராமம் அருகே உள்ள தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அஸ்வதம்மா என்ற பெண்ணையும் காட்டு யானை தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் தாசரப்பள்ளி தளி சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். தளி போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 2 பெண்கள் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சம்பவம் அன்னியாலம் மற்றும் தாசரப்பள்ளி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றை காட்டு யானை அன்னியாலம், தாவரக்கரை, தாசரப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தொடர்ந்து சுற்றித்திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஒற்றை காட்டு யானையை வேறு அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.