நீலகிரிக்குள் நுழையும் 21ஆயிரம் வாகனங்கள் !
நீலகிரிக்குள் நுழைய, முதல் நாளிலேயே 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.
ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தங்கும் இடம், கழிப்பறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தளங்களையும் பார்க்க முடியாமல் அதிருப்தி அடைகின்றனர். உள்ளூர் மக்களும் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வருகைக்கான கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக முதல் கட்டமாக இ-பாஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுரறுத்தியது.
இதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக இன்று காலை 6 மணி முதல் https://epass.tnega.org என்ற பிரத்தியேக இணையதளம் வெளியிடப்பட்டு அதன் மூலம் இ- பாஸை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் முதல் நாளான நேற்று 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் பயணிக்க உள்ளனர். இதன்படி 518 தனியார் பேருந்துகள், 466 மினி பேருந்துகள், 15,787 கார்கள், 1,289 வேன்கள், 2,841 இரு சக்கர வாகனங்கள், 545 வணிகம் தொடர்பான வாகனங்கள் என மொத்தம் 21,446 இ-பாஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் எந்த தினத்தில் நீலகிரிக்குள் வர உள்ளது என்ற விவரம் இதில் தெரியவில்லை.
இவர்கள் இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை எந்த தினத்தில் வேண்டுமானாலும் வர விண்ணப்பித்திருக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.