தஞ்சாவூரில் உரிமை கோரப்படாத 26 உடல்கள் ஒரே நாளில் அடக்கம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாத 26 உடல்கள் ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2024-06-13 06:32 GMT

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாத 26 உடல்கள் ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட காவல் சரகம் முழுவதிலும் இருந்து ஆங்காங்கே ஆதரவின்றி, உடல் நலிவுற்று உயிரிழந்து கிடந்த உடல்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதக் கிடங்கில் கடந்த சில மாதங்களாக வைக்கப்பட்டிருந்தது. உடலை உரிமை கோரி யாரும் வராத நிலையில், அந்த உடல்களும் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய மருத்துவக் கல்லூரி நிர்வாகம், காவல் துறையிடம் கேட்டுக் கொண்டது.

அதன்படி 26 உடல்களை அடக்கம் செய்ய நேசக்கரம் என்ற தன்னார்வ அமைப்பு முன்வந்தது. இதையடுத்து திங்கள்கிழமை 26 உடல்களையும் தஞ்சாவூர் ராஜாகோரி சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மாநகராட்சி சார்பில் பொக்லீன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு ஒரே இடத்தில் 26 உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து  உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் பரப்பி, குடும்ப உறுப்பினர் ஒருவர் இறக்கும் போது செய்கின்ற பால் தெளிப்பு உள்ளிட்ட அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தனர்.

இதுகுறித்து தன்னார்வ அமைப்பினர் கூறியதாவது: ஆதரவற்ற உடல்கள் என்பது வாழ்வின் கொடுமை, அதனை அடக்கம் செய்வது சமூகக் கடமை என்கின்ற நோக்கத்தோடு, நேசக்கரம் அமைப்பினர், தொடர்ச்சியாக ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்யும் பணியை  கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று தொடங்கிய காலகட்டத்தில் இருந்து செய்து வருகிறோம்.  இதுவரை 350 க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளோம். இப்பணிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காவல்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்" என்றனர்.

Tags:    

Similar News