மழை வெள்ளத்தில் 3 பேர் பலி - உறவினர்கள் போராட்டம்
தூத்துக்குடி மாநகரில் அண்ணா நகர் மற்றும் வி எம் எஸ் நகரில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை வெள்ளத்தில் நீரில் மூழ்கி இரண்டு பேர் பலியாகி உள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை அதிக அளவு இருக்கலாம் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
உறவினர்கள் போராட்டம்
தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் மழை வெள்ளத்தால் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து குடியிருப்புகளை விட்டு பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் சிலர் குடியிருப்புகளில் மொட்டை மாடிகளில் வசித்து வருகின்றனர். வீடுகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளான குடிநீர் உணவு பால் எந்தவித அடிப்படைத் தேவைகளையும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி வி எம் எஸ் நகர் பகுதியில் வீட்டில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பகுதியில் குடியிருப்பில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி மேரியம்மாள் என்பவர் மழை நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அண்ணா நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போன்று அண்ணா நகர் பகுதியில் ராமு அம்மாள் என்ற 85 வயது மூதாட்டி வீட்டில் மழை நீர் புகுந்ததால் நீரில் மூழ்கி பலியாகி உள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு பலியான அவரது உடலை உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு அண்ணா நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று மழை நீரில் மூழ்கி செந்தூர்பாண்டி என்ற ஆட்டோ டிரைவர் பலியானார்.
மழை நீரில் மூழ்கி பலர் குடியிருப்புகளுக்கு உள்ளேயே இறந்து போய் இருக்கலாம். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குடியிருப்புகளில் சூழ்ந்த மழை வெள்ள பகுதிகளுக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.